திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நாக்கு (Nagqu) நகருக்கு உட்பட்ட மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் இந்த கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் 339-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், 46-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி 12,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாகப் பிரதான தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் தொலைத்தொடர்பு மற்றும் ரயில் சேவைகளும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான கூடாரங்கள், போர்வைகள், உணவுகள் மற்றும் மருத்துவ உதவிகள் அவசரகால அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
சுமார் 1,600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புப் படையினர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கு இடையே தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமங்களுக்கு மீட்புக் குழுவினர் தொடர்ந்து விரைந்து வருவதால், உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.