அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தின் தொடக்கத்தில் திருநங்கைகள் ராணுவத்தில் பணியாற்றுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்தத் தடையின் அடிப்படையில் திருநங்கைகளை பணியிலிருந்து நீக்க உருவாக்கப்பட்ட பரிசீலனைக் குழுக்கள், அவர்களை விடுவிப்பதற்குப் பதிலாகப் பணியில் தொடர ஆதரவாக வாக்களித்துள்ளன. கடற்படை மற்றும் மரைன் கார்ப்ஸ் சார்பில் இதுவரை நடத்தப்பட்ட 12 வழக்குகளில் 9 வழக்குகளில் திருநங்கைகளை ராணுவ சேவையில் நீட்டிக்கவே குழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அதிபர் டிரம்பின் உத்தரவின்படி திருநங்கைகளை பணிநீக்கம் செய்யுமாறு பென்டகன் அறிவுறுத்திய போதிலும், அவர்களின் சேவைப் பதிவுகள் மற்றும் திறமைகளைக் கருத்தில் கொண்டு சக அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதேவேளையில் அமெரிக்க தரைப்படை மற்றும் விமானப்படைகளில் அமைக்கப்பட்ட குழுக்கள் பெரும்பாலான திருநங்கைகளை பணியிலிருந்து நீக்கவே வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரகசிய விசாரணைகளில் குடும்ப உறுப்பினர்கள்கூட அனுமதிக்கப்படாத சூழலில், சேவைப் பதிவுகளின் அடிப்படையில் இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராணுவத்தின் இந்த முடிவு அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிரான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படும் நிலையில், பென்டகன் தரப்பிலிருந்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கடற்படைக் குழுக்களின் இந்த வாக்களிப்பு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.