Posted in

ஜெர்மனியில் ஈகிள்ஸ் நெஸ்ட் கட்டிடம் தீப்பற்றி எரிந்தது: சந்தேக நபர் கைது!

தெற்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள பெர்ச்ச்டெஸ்கேடன் பகுதி மலையில் அமைந்துள்ள ‘கேல்ஸ்டீன்ஹவுஸ்’ (Kehlsteinhaus) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ என்று அழைக்கப்படும் இந்த மலை விடுதியில் தீப்பற்றிப் பரவியதையடுத்து, சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த சந்தேக நபர் ஒருவரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1938 ஆம் ஆண்டு நாஜி அதிகாரிகளின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு உணவகமாகவும் இயங்கி வருகிறது. இரவு 9:15 மணியளவில் தீ விபத்து குறித்த எச்சரிக்கை மணி ஒலித்த நிலையில், கட்டிடத்திற்குள் யாரும் இல்லை எனத் தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டக் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பின்னணி குறித்துக் காவல்துறையினர் தீவிர குற்றவியல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிடுவதற்காகப் பவேரிய காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.