பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அல்பேனியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்தல், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகப் பாரிஸ், மிலன், பார்சிலோனா போன்ற முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
பிரான்ஸில் மட்டும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரிலும், ஸ்பெயினின் பார்சிலோனாவிலும் போராட்டக்காரர்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடையடைப்புகளைச் சேதப்படுத்தியதால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதியான வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுவே நுழைந்த சில வன்முறை கும்பல்களே இந்தச் சேதங்களுக்குக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்தப் பிரான்ஸ் அரசு நாடு முழுவதும் சுமார் 70,000 காவல் துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
ஐரோப்பிய அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முயன்று வரும் போதிலும், போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் சூழல் நிலவுகிறது.