சவுதி அரேபியா மீதான ஹவுதி அமைப்பினரின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மெக்கா மற்றும் மதினா மாவட்டப் பகுதிகளில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் இடிபாடுகள் விழுந்ததாக சவுதி சிவில் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. மெக்காவிற்கு வெளியே உள்ள வாடி முகாமஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தச் சிதைவுகள் விழுந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சவுதியின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளையில், புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சவுதி கூறுவது முற்றிலும் பொய் என ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா மறுத்துள்ளார். தங்களது இலக்குகள் சவுதியின் ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மட்டுமே என்றும், தாங்கள் நடத்தும் தாக்குதல்களைப் பகிரங்கமாக அறிவித்து வருவதாகவும் ஹவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத், தம்மாம் உள்ளிட்ட சவுதி நகரங்களின் விமான நிலையங்களை நோக்கியே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களால் பிராந்திய எல்லைப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியப் வான் பாதுகாப்புப் படையினர் எல்லையோரப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.