Posted in

தமிழகத்தில் டாஸ்மாக் ஸ்கேனர் கருவி பழுது: பல இடங்களில் கடைகள் மூடப்பட்டதால் மதுப் பிரியர்கள் சிரமம்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பாட்டிலுக்கு ரூ. 10 ரீஃபண்ட் வழங்கும் புதிய திட்டம் மற்றும் டிஜிட்டல் பில்லிங் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகக் கடைகளுக்கு வழங்கப்பட்ட பாட்டில் ஸ்கேனர் கருவிகள் மற்றும் மென்பொருள்கள் சரியாகச் செயல்படாமல் மெதுவாக இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் விற்பனையின் போதும் காலி பாட்டில்களைப் பெறும்போதும் அதிக நேரமாவதால், கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அதிகரித்து ஊழியர்களால் கூட்டத்தைக் கையாள முடியாத சூழல் உருவானது.

இதன் காரணமாகச் சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றக்கணக்கான டாஸ்மாக் கடைகளைக் கட்டாயமாக மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்கேனர் கருவிகள் சரியாக வேலை செய்யாதது, காலி பாட்டில்களைச் சேமித்து வைக்கப் போதிய இடவசதி இல்லாதது மற்றும் கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் மதுப் பிரியர்கள் கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடைகளைத் திறக்காமல் மூடி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், சில ஊழியர்களைப் பணியிடைநீக்கமும் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீரமைக்கவும், பாட்டில் திரும்பப் பெறும் நடைமுறையை எளிமையாக்கவும் டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு தரப்பில் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் அனைத்துக் கடைகளும் மீண்டும் சீராக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.