Posted in

அமெரிக்காவில் 9 பேருடன் நொறுங்கிய லியர்ஜெட் விமானம்: பிரார்த்தனை செய்த விமானியின் குரல் பதிவு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் நோக்கி 9 பேருடன் பயணித்த ‘லியர்ஜெட் 60’ (Learjet 60) ரகப் தனியார் விமானம், புளோரிடா மாகாணத்தின் பாம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மோசமான வானிலை, பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றோட்டம் காரணமாக விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து வினாடிக்கு பல்லாயிரம் அடிகள் வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விபத்துக்குள்ளாவதற்குச் சில நொடிகளுக்கு முன்பாகக் கட்டுப்பாட்டு அறையுடன் உரையாடிய காக்பிட் (Cockpit) ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில், 20 வயதான உதவி விமானி நடாலியா ஃபில்கேராஸ் “நாங்கள் தரையில் நொறுங்கப் போகிறோம்” என அவசர உதவி கோரி அலறுவதும், 55 வயதான முதன்மை விமானி ஜெஃப் கிரகரி கடவுளிடம் பிரார்த்தனை (Lord’s Prayer) செய்யும் குரலும் பதிவாகியுள்ளது. மணிக்கு பல நூறு மைல்கள் வேகத்தில் செங்குத்தாக வந்து நிலத்தில் மோதியதால் அப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. விமானம் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே அதன் பாகங்கள் பிளவுபட்டு உடைந்திருக்கலாம் என்ற கோணத்திலும் NTSB ஆய்வாளர்கள் தடையங்களைச் சேகரித்து வருகின்றனர். விபத்து நடந்த விதம் ஏவுகணை பாய்ந்தது போல இருந்ததாக புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது விமானத்தின் கருப்புப் பெட்டி (Black Box) மற்றும் விமானப் பராமரிப்பு ஆவணங்களைக் கைப்பற்றி நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியவும், உடல்களை மீட்டு அடையாளம் காணவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.