அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் நோக்கி 9 பேருடன் சென்ற ‘லியர்ஜெட் 60’ (Learjet 60) தனியார் விமானம், புளோரிடாவின் பாம் பீச் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்திலிருந்த 9 பேரும் உயிரிழந்த நிலையில், விமானத்தின் இடது எலிவேட்டர் (Elevator – விமானத்தைக் மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கிச் செலுத்த உதவும் வால் பகுதி) 3 துண்டுகளாக உடைந்து 1.3 மைல் முதல் 3.8 மைல் வரையிலான தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விமானம் தரையில் மோதுவதற்கு முன்பாகவே காற்றில் பறந்துகொண்டிருந்த போதே அதன் முக்கிய பாகங்கள் பிளவுபட்டு உடைந்திருப்பதை இந்தத் தடையங்கள் காட்டுகின்றன.
தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) உறுப்பினர் டாம் சாப்மேன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “விமானத்தின் வால் பகுதி (எலிவேட்டர்) சேதமடைந்த நிலையில், விமானிகள் விமானத்தைக் கட்டுப்படுத்தி மேலே உயர்த்தியிருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் நிலவிய மோசமான பனிப்பொழிவு மற்றும் கடும் காற்றோட்டத்துடன் கூடிய புயல் வானிலையே இச்சம்பவத்தில் முதன்மைப் காரணியாக ஆராயப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் சுமார் 600 உள்ளூர்வாசிகள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது NTSB மற்றும் எஃப்ஏஏ (FAA) புலனாய்வாளர்கள் விபத்து இடத்தில் உள்ள பள்ளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடய சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்கான முழுமையான காரணங்களை விவரிக்கும் முதற்கட்ட அறிக்கை ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும், விரிவான இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டிற்கும் மேலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.