Posted in

டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதல் வசூல் அதிரடி: 360 ஊழியர்கள் இடைநீக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விடக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் பெயரிலும், கூடுதல் தொகையாகவும் இந்த வசூல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விதியை மீறி சட்டவிரோதமாகக் கூடுதல் தொகை வசூலில் ஈடுபட்ட 360 ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கூடுதல் கட்டண முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், மேலும் 1,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்கும் நோட்டீஸ் (Memo) வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய அரசாணையின்படி, பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள MRP விலைக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், தனியாகக் கூடுதல் தொகை எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், சில கடைகளில் ஊழியர்கள் தொடர்ச்சியாகப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்த நடவடிக்கை குறித்துத் தெரிவித்துள்ள டாஸ்மாக் அதிகாரிகள், இது ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல என்றும், ஊழல் மற்றும் கூடுதல் வசூலை முழுமையாகத் தடுப்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடு என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேவேளையில், முறையான டிஜிட்டல் ரசீது மற்றும் மெஷின் கணக்கு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டதால், பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை முடக்கும் நோக்கில் சிலர் திட்டமிட்டு சதியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்போது அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலி பாட்டில்களைப் பெற்றுக்கொண்டு தொகையை நேராக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தானியங்கி இயக்கம் (Reverse Vending Machines) விரைந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.