பிரிட்டன் அரசுக் கடற்படைக்கு (Royal Navy) போர்க்கப்பல்களைக் கட்டித் தரும் பாப்காக் (Babcock) சர்வதேச நிறுவனத்தின் வணிகப் பிரிவு ஒன்று, தடைகளை மீறி ரஷ்ய அதிபர் புடினின் போர்க் கப்பல்களுக்குத் தேவையான உபகரணங்களை விற்பனை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் £60,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்கள் மறைமுக வழிகளில் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் மீதான போரினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உதிரிபாகங்கள் அந்நாட்டைச் சென்றடைந்துள்ளது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தி சன் இதழ் நடத்திய புலனாய்வு விசாரணையில், சர்வதேசத் தடைகளைத் தந்திரமாகத் தவிர்த்து, மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக இந்த உதிரிபாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் பாதுகாப்புத் துறையின் முக்கிய ஒப்பந்ததாரராக விளங்கும் ஒரு நிறுவனத்தின் இணைந்த அமைப்பே இந்தச் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டிருப்பது பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிரிட்டனின் தேசியப் பாதுகாப்பு மற்றும் தடைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்தின் பலவீனங்கள் அம்பலமாகியுள்ளதாக வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, லண்டன் அரசாங்கம் மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் விவகாரம் குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனம் சட்டவிரோத விற்பனைகள் மற்றும் தடைகளை மீறிய நடவடிக்கைகள் மீது உள்நாட்டுத் தணிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்ய போர்க் கப்பல்களுக்கு உதவி புரியும் அனைத்து வழிகளையும் முழுமையாக அடைக்க கடுமையான சட்ட நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
தற்போது தடை செய்யப்பட்ட ஏற்றுமதி தொடர்பில் பிரிட்டன் தேசியக் குற்றவியல் முகமை மற்றும் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.