Posted in

ரஷிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கு: புடினுக்கு எதிராகப் போராடும் மெரினா லிட்வினென்கோ!

ரஷிய பாதுகாப்பு அமைப்பான எஃப்.எஸ்.பி (FSB) முன்னாள் அதிகாரி அலெக்சாண்டர் லிட்வினென்கோ, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் கடந்த 2006-ஆம் ஆண்டு லண்டனில் பொலோனியம் விஷம் கொடுத்துக் படுகொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட ஆரம்பத்தில் அவரது மனைவி மெரினா எதிர்த்தாலும், பின்னர் அது புடினின் கொடூரமான ஆட்சியை உலகிற்கு உணர்த்திய முக்கிய சாட்சியாக மாறியது. தனது கணவர் இறந்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மெரினா லிட்வினென்கோ எழுதி வெளியிட்டுள்ள புதிய புத்தகத்தில் பல அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

லண்டன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய போதே, தன்னைக் கொல்ல அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதாக அலெக்சாண்டர் லிட்வினென்கோ வாக்குமூலம் அளித்திருந்தார். தனது கணவர் பலியான பின்னரும், ரஷிய உளவு அமைப்பின் மிரட்டல்கள் மற்றும் தனிப்பட்ட இழப்புகளுக்கு இடையே மெரினா தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி உண்மையைக் கொண்டு வந்தார். தனது கணவர் விட்டுச் சென்ற போராட்டத்தை தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், புடினின் சர்வாதிகார ஆட்சி ஒருநாள் முடிவுக்கு வரும் என்றும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷிய அரசின் அச்சுறுத்தல்களையும் மீறி மெரினா லிட்வினென்கோ மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் முயற்சி, சர்வதேச அளவில் புடின் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது மெரினா லிட்வினென்கோ எழுதிய ‘ஏ லைஃப் இன் ஃபிராக்மென்ட்ஸ்’ (A Life in Fragments) புத்தகம் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் இது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.