Posted in

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் கொடுங்காயமடைந்தனர். இவர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூடுதல் நிவாரணம் கோரி அளித்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.50 லட்சத்தில் நிலுவையாக உள்ள ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.25 கோடியும் வழங்கப்படவுள்ளது. அதேபோல் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ.10 லட்சத்தில் மீதமுள்ள ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடியும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.5.25 கோடி விடுவிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாகக் கூடுதல் உதவி கோரி வந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நடவடிக்கை நிவர்த்தி அளித்துள்ளதாகக் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த கூடுதல் நிவாரண நிதி நேரடியாகக் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.