Posted in

அமுல் பால் விலை உயர்வு: நாளை முதல் புதிய கட்டணம்

நாடு முழுவதும் அமுல் பாக்கெட்டுகளின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் இணையம் அறிவித்துள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் இணையம் (GCMMF) தனது ‘அமுல்’ பிராண்ட் புதிய பால் வகைகளின் விலையை நாடு முழுவதும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை (நவம்பர் 12) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்படி அமுல் டாஸா (Toned Milk) பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.62 ஆகவும், அமுல் கோல்ட் (Full Cream) பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.80 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றுக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தீவனம், உலர் தீவனம், சோளம், பருத்திக் கொட்டை மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் இழப்பை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் வருவாயில் 80 சதவீதம் 36 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களுக்கே சென்று சேருவதாகவும் அமுல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே மதர் டைரி நிறுவனம் தனது பால் விலையை உயர்த்திய நிலையில், அமுல் நிறுவனமும் பால் விலையை உயர்த்தியுள்ளது சாமானிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

நாளை காலை முதல் ரீடெய்ல் கடைகள் மற்றும் முகவர்கள் மூலமாகப் புதிய விலையிலேயே அமுல் பால் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.