சவுதி அரேபியாவில் திருமணத்திற்குப் புறம்பாகக் குழந்தை பெற்ற கென்ய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணியாளருக்கு நீதிமன்றம் 100 சவுக்கடி தண்டனை விதித்துள்ளது.
கென்யா நாட்டைச் சேர்ந்த 40 வயதான எஸ்தர் வஞ்சா முத்தோனி (Esther Wanja Muthoni) என்ற பெண் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் 2025 ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இஸ்லாமியச் சட்டத்தின்படி திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு மற்றும் குழந்தை பிறப்பு குற்றமாகக் கருதப்படுவதால், ரியாத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 100 சவுக்கடிகள் மற்றும் ஓராண்டு நாடு கடத்தல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது தனக்கு வழக்கறிஞர் உதவி வழங்கப்படவில்லை என்றும், தாய்நாடு திரும்பும் எண்ணத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் 2020-ஆம் ஆண்டு சவுக்கடி தண்டனை முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தீவிரமான குற்றங்களுக்கு இத்தகைய தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்படுவது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ‘அல்குவஸ்ட்’ (ALQST) போன்ற மனித உரிமை அமைப்புகள் இந்தத் தீர்ப்பை மிகக் கடுமையான நடவடிக்கை எனக் கூறி கண்டித்துள்ளன.
இந்தத் தண்டனை குறித்துக் கவலை தெரிவித்துள்ள கென்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், சவுதி அரேபியா அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியாகப் பேசி தீர்வு காண முயற்சிப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது அப்பெண்ணும் அவரது குழந்தையும் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அவர்கள் கென்யாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.