Posted in

இரானில் பெண் வீரர்களுக்கு விசேட ராணுவப் பயிற்சி: புரட்சிகர காவல் படை நடவடிக்கை!

இரானில் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையில் (IRGC) புதிதாகச் சேர்க்கப்பட்ட பெண் வீரர்களுக்கு விசேட ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இரானின் பாசிஜ் தன்னார்வப் படை மற்றும் புரட்சிகர காவல் படையின் மகளிர் பிரிவில் இணைந்துள்ள பெண் வீரர்களுக்குத் தற்காப்புக் கலைகள், ஆயுதங்களைக் கையாளும் முறைகள் மற்றும் வான்வழித் தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற பயிற்சியின் போது துப்பாக்கிச் சூடு, ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்குதல் மற்றும் நிலப்பரப்பு அடிப்படையிலான போர் உத்திகள் ஆகியவை பெண் வீரர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரானின் சமூக கலாச்சார விதிமுறைகளுக்கு உட்பட்டு, பெண் வீரர்களின் திறனை உயர்த்தவும் நாட்டின் அவசரகாலப் பாதுகாப்புத் தேவைகளுக்காகவும் இத்தகைய பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காவல்துறை மற்றும் மருத்துவப் பிரிவுகளில் பெண்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது நேரடி மற்றும் சிறப்பு ராணுவப் பணிகளிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என IRGC தளபதிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இரானின் உள்நாட்டுச் சூழல் மற்றும் பிராந்தியப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த ராணுவப் பயிற்சிகள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.

தற்போது தேர்ச்சி பெற்ற பெண் வீரர்கள் இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டப் பயிற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.