Posted in

நியூயார்க் புரூக்ளினில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் (Brooklyn) பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை சுமார் 4:01 மணியளவில், பிளாட்புஷ் அவென்யூ (Flatbush Avenue) பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் அருகிலிருந்த கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்குள் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.

கீழ்தளத்தில் வணிக நிறுவனங்களும் மேல் தளங்களில் குடியிருப்புகளும் கொண்ட இந்தக் கட்டிடத்திற்கு அருகில், புதிய கட்டுமானத்திற்காகப் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்ததாக நியூயார்க் நகரக் கட்டிடத் துறை ஆணையர் அகமது திகானி தெரிவித்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததால் அதன் செங்கற்கள் மற்றும் மரத்துண்டுகள் அருகிலிருந்த கட்டுமானக் குழிக்குள் நிரம்பியதோடு, அருகிலிருந்த மற்றொரு கட்டிடத்தின் பக்கவாட்டுச் சுவரும் சேதமடைந்தது. காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நியூயார்க் தீயணைப்புத் துறை ஆணையர் லிலியன் போன்சிக்னோர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை “பேரழிவை ஏற்படுத்திய சரிவு” என்று விவரித்த நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி, உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் வெளியிட்டுள்ள பதிவில், அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணைக்குத் தனது நிர்வாகம் முழு ஆதரவை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 மற்றும் 7 வயதுடைய தனது இரண்டு குழந்தைகளும் மனைவியும் உயிருடன் மீட்கப்பட்டதாகக் கட்டிடத்தில் வசித்த ஆண்டர்சன் வெலெஸ் என்பவர் நியூயார்க் போஸ்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் குவிக்கப்பட்டு, மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றித் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். இடிபாடுகளுக்குள் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை உடனடியாகக் கணிக்க முடியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை மாறக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்துக் கட்டிடத் துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.