Posted in

கல்லூரி மாணவர்கள் பெயரில் கறவை மாடு கடன் பெற்று ரூ.70 கோடி மோசடி

சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்தி கறவை மாடு கடன் பெயரில் ரூ.70 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து, அவர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று கறவை மாடு வாங்குவதற்காக வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த கண்ணகி என்பவர் நடத்தி வரும் ‘பெஸ்ட் எம்பவர்மென்ட்’ என்ற அறக்கட்டளையின் மூலம் இந்தத் திட்டமிட்ட முறைகேடு அரங்கேறியுள்ளது. மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணத்தை மாற்றிக் கொடுத்தால் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மாணவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படும் தொகையைத் தங்களின் கணக்கிற்கு மாற்றினால் ரூ.1,000 கமிஷன் தருவதாகக் கூறி ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர். இதைக் நம்பி மாணவர்களும் அவர்கள் கூறியபடி செயல்பட்டு கமிஷன் தொகையைப் பெற்று வந்துள்ளனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு தனியார் வங்கிகளில் இருந்து மாணவர்களுக்கு வந்த கடன் தவணை செலுத்தக்கோரும் நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி முறைகேட்டை உறுதி செய்தனர். இச்சம்பவத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி கண்ணகி மற்றும் அவரது கூட்டாளி முத்துகுமரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மாணவர்களின் எதிர்காரியைக் குறிவைத்து நடைபெற்ற இந்த மாபெரும் கடன் மோசடி குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.