கோவை மாவட்டம் காரமடை தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை மற்றும் சாதி ரீதியிலான வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார். காரமடை ஒன்றியம் காளம்பாளையம் ஊராட்சிச் செயலாளராகப் பணியாற்றி வந்த அந்தப் பெண் நிர்வாகி, நவம்பர் 12-ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாகப் புகார் மனு அளித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் பணியாற்றி வரும் தன்னை, ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு இணங்க மறுத்ததால் ஊராட்சிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புதிய நிர்வாகியான சபிதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தன்னைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோரிடம் ஆதாரங்களுடன் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தப் பெண் நிர்வாகி தெரிவித்துள்ளார். அத்துடன், காவல் நிலையத்தில் அளித்த புகாரையும் ஒன்றியச் செயலாளர் தரப்பினர் கட்டாயப்படுத்தித் திரும்பப் பெற வைத்ததாகவும், இதற்கான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதால், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட தவெக ஒன்றியச் செயலாளர் தரப்பிலிருந்தோ அல்லது கட்சித் தலைமையிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.