Posted in

டிரம்ப் மிரட்டலால் அதிரும் ஈரான்; மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி ‘மனிதச் சங்கிலி’ அமைக்கும் இளைஞர்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்கள் ஒரே இரவில் “சாம்பலாக்கப்படும்” என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். “வெறும் நான்கு மணி நேரத்திற்குள் ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை எங்களால் முடக்க முடியும்” என டிரம்ப் கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்ரல் 7, 2026) டிரம்ப் விதித்துள்ள காலக்கெடு முடிவடைந்தவுடன் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் இந்த “அழிவு” மிரட்டலுக்குப் பதிலடியாக, ஈரான் அரசு ஒரு விசித்திரமான மற்றும் அபாயகரமான போராட்டத்திற்குத் தனது நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஈரானின் இளைஞர் விவகாரங்களுக்கான கவுன்சில் செயலர் அலிரேசா ரஹீமி, அரசு தொலைக்காட்சியில் தோன்றி, “நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன், இளைஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி “மனிதச் சங்கிலி” (Human Chains) அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், பொதுமக்களை “மனிதக் கேடயங்களாக” (Human Shields) பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதை இது காட்டுகிறது.

இந்த மனிதச் சங்கிலி போராட்டமானது செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் (ஈரான் நேரப்படி) நாடு முழுவதும் உள்ள முக்கிய மின் நிலையங்களில் தொடங்கப்பட உள்ளது. “இந்த மின் நிலையங்கள் நமது தேசிய சொத்துக்கள்; அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இவற்றைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்” என ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் வியூகத்தைச் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது “போர்க்குற்றம்” (War Crime) எனச் சர்வதேச அளவில் விமர்சிக்கப்படலாம் என்பதால், அமெரிக்கா தனது தாக்குதல் திட்டத்தை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் மஜீத் காதேமி கொல்லப்பட்டதால் ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. ஒருபுறம் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போர்நிறுத்தத்திற்கு முயன்றாலும், மறுபுறம் டிரம்ப் தனது நிபந்தனைகளில் உறுதியாக உள்ளார். ஈரானிய இளைஞர்கள் தங்களது உயிரைப் பணையம் வைத்து மின் நிலையங்களைப் பாதுகாக்கத் திரண்டு வருவது, பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவிற்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு 8 மணி காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை உலகம் திக் திக் நிமிடங்களுடன் கவனித்து வருகிறது.