தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மிகக்குறைந்த நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். குறிப்பாக, சென்னை தி.நகர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பிரசாரம் செய்ய மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த மூன்று மணி நேரத்திற்குள் இரண்டு இடங்களுக்கும் பயணித்து மக்களைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பதால், அந்தத் தேதிக்கான பிரசாரத்திற்கு விஜய் ‘லீவ்’ போட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கட்சித் தலைமையிடமிருந்து வெளியாகியுள்ளன.
தலைவர் வர முடியாத சூழலில், தொண்டர்களையும் பொதுமக்களையும் உற்சாகப்படுத்த வேட்பாளர்கள் ஒரு விசித்திரமான உத்தியைக் கையாண்டு வருகின்றனர். பூம்புகார் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் பொறையார் விஜயாலயன், விஜய்யின் உருவம் கொண்ட ஒரு பெரிய “கட்-அவுட் பொம்மையை” தனது பிரசார வாகனத்தில் வைத்துக் கொண்டு வீதி வீதியாக வாக்குச் சேகரித்து வருகிறார். தலைவரின் நேரிடையான வருகை இல்லாத ஏமாற்றத்தைப் போக்க, அந்தப் பொம்மையையே விஜய் போலப் பாவித்து மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் “எனக்கு வேற வழி தெரில ஆத்தா” என்ற நகைச்சுவையான வாசகங்களுடன் வைரலாகி வருகின்றன.
விஜய்க்குத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து முட்டுக்கட்டைகளை உருவாக்கி வருவதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். “தலைவர் விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் போலத் திரள்வதால், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி அரசு அவருக்கு அனுமதி மறுக்கிறது அல்லது நேரத்தைக் குறைக்கிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்” என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இருப்பினும், தடைகளைத் தாண்டி விஜய் தனது அடுத்தகட்ட பயணத்தைத் திருச்சி மற்றும் புதுச்சேரியில் தொடர உள்ளார்.
விஜய் நேரிலோ அல்லது பொம்மை வடிவிலோ வந்தாலும், அவருக்குக் கிடைக்கும் வரவேற்பு மற்ற அரசியல் கட்சியினரைத் திணறடித்துள்ளது. “விசில்” சின்னத்தைப் பிரபலப்படுத்த வேட்பாளர்கள் இத்தகைய நூதன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய்யின் இந்தத் தேர்தல் பயணம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், விஜய்யின் இந்த “பொம்மை பிரசார” உத்திகள் ஓட்டுகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.