தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது மனைவி டெய்சி மார்ட்டினும் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக நேற்று (நவம்பர் 16) அறிவித்துள்ளனர். ஒரு மகன் உள்ள நிலையில், தாங்கள் தம்பதியாகப் பிரிந்தாலும் குழந்தையை இணைந்து வளர்ப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று டெய்சி மார்ட்டின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் டிஜிபியுமான திலகவதியின் சகோதரி மகன் ஆவார். ஆதவ் அர்ஜுனாவிற்கு ஐந்து வயதாக இருந்தபோது குடும்பப் பிரச்சனைகளால் அவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயை இழந்த ஆதவையும் அவரது உடன்பிறந்தவர்களையும் திலகவதி ஐபிஎஸ் பாதுகாத்து வளர்த்ததுடன், அவரை விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்தினார்.
சென்னை எம்.சி.சி. கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற அவர், இந்தியக் கூடைப்பந்து அணியில் விளையாடியதுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கப் பொதுச்செயலாளராகவும் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத் தலைவராகவும் உயர்ந்தார். பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றி, விசிக துணைப் பொதுச்செயலாளராகச் செயல்பட்ட அவர், 2025-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானார்.
தொழிலதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியைக் காதலித்து 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆதவ் அர்ஜுனா, கோவையில் பல்வேறு வணிக நிறுவனங்களையும் நடத்தி வந்தார். தற்போதைய விவாகரத்து அறிவிப்பைத் தொடர்ந்து, தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று டெய்சி மார்ட்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.