தமிழக அரசின் சார்பில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும், மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் மற்றும் பிற அரசுத் திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும் போன்ற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மணமக்கள் திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்துடன் திருமணப் பத்திரிகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் சரிபார்க்கப்பட்டுத் தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும்.