2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது நடந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிகளான பிபின் சந்திர ஜோஷி மற்றும் பிரதீப் மோர்டியா ஆகியோர் 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதையும், அவர்களில் ஒருவர் கடுமையான மாற்றுத்திறனாளியாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் 2008-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை குஜராத் அரசு 2022 ஆகஸ்டில் முன்கூட்டியே விடுதலை செய்திருந்தது. பின்னர் 2024 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், 2017 மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு தற்போது இருவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மிகுந்த வேதனையடைந்துள்ள பில்கிஸ் பானோ, தனது கருத்தைக் கேட்காமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு மீண்டும் பயம் வந்துவிட்டது; எனக்காகவும், எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளுக்காகவும் நான் அஞ்சுகிறேன், நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் இழந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மூன்று வயது மகள் சலேஹாவின் நினைவுக்காகவும், நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களின் நீதிக்காகவும் இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்துத் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தப் போவதாகப் பில்கிஸ் பானோ திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ள இருவரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.