மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடற்கூராய்வு அறிக்கையில் காயங்கள் இருப்பதாகக் கூறி அவரது மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிசிடிவி பதிவுகளில் உள்ள நேரத்தையும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் டிஜிட்டல் கையெழுத்து நேரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஓட்டுநரின் இறப்புக்குப் பிறகு சுமார் 4 மணி நேரம் கழித்தே வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதைக் சுட்டிக்காட்டினார். மேலும், செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களின் சிசிடிவி பதிவுகளைப் பாதுகாத்து வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விசாரணை சிபிசிஐடி வசம் இருப்பதால் சிசிடிவி காட்சிகளை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதி, விசாரணை அதிகாரிகளிடம் இருக்க வேண்டிய சிசிடிவி காட்சிகள் மட்டும் ஊடகங்களில் எப்படி வெளியானது என்றும், அதனை கசிய விட்ட அதிகாரி யார் என்றும் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் குறிப்பிட்ட நாட்களுக்கான சிசிடிவி காட்சிகளின் இரண்டு நகல்களைச் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.