Posted in

காலி மதுபாட்டிலை வாங்க மறுத்த ஊழியர் சஸ்பெண்ட்: சென்னையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை

சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடையில், வாடிக்கையாளர் ஒருவர் தான் பயன்படுத்திய காலி மதுபாட்டிலைத் திரும்பக் கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்குப் பணியிலிருந்த விற்பனையாளர் எம். விக்டர், அரசின் விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல் அந்தைக் காலி பாட்டிலை வாங்க மறுத்துள்ளார். மேலும், இது குறித்துக் கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரிடம் அவர் தேவையற்ற வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், காலி பாட்டில்கள் பொது இடங்களில் வீசப்படுவதைத் தடுக்கும் வகையிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் கீழ் மதுபானம் வாங்கிய வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது ஊழியர்கள் எவ்வித மறுப்புமின்றிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது டாஸ்மாக் நிர்வாகத்தின் கட்டாய விதியாகும்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், விற்பனையாளர் விக்டர் வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்ததும், விதிகளை அப்பட்டமாக மீறியதும் உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை தெற்கு மாவட்ட மேலாளரும் துணை ஆட்சியருமான ர. ஜஸ்வந்த் கண்ணன் துறை ரீதியான விசாரணையை எதிர்நோக்கும் வகையில் அவரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடையில் நடந்த இந்த ஒழுங்கீனச் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட கடையின் மேற்பார்வையாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் விதிமுறைகளை மீறும் பணியாளர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.