Posted in

செஞ்சி சிறுமி மாயம்: செங்கல் சூளை சாம்பல் தடயவியல் அறிக்கை இன்று வெளியாக வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், அவரது வீட்டிற்கு எதிரே உள்ள செங்கல் சூளையில் சேகரிக்கப்பட்ட சாம்பல் மாதிரிகளின் தடயவியல் சோதனை முடிவுகள் இன்று (நவம்பர் 18) சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூலித் தொழிலாளி வடிவேலு மற்றும் பவானி தம்பதியின் மகளான ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற நிலையில், மறுநாள் அதிகாலை முதல் காணாமல் போனார்.

சிறுமி மாயமான இரவில் அந்தச் செங்கல் சூளையில் செங்கல் சுடும் பணி நடைபெற்றுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராஜு தலைமையிலான குழுவினர் மற்றும் மோப்ப நாய்களைக் கொண்டு சிபிசிஐடி அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அப்போது செங்கல் சூளையின் உட்பகுதியில் இருந்து சாம்பல் மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அறிவியல் பூர்வமான ரசாயனப் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தச் சாம்பல் மாதிரிகளில் மனித எலும்புத் துகள்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரியல் தடயங்களோ உள்ளதா என்பது இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகத் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மனிதத் தடயங்கள் எதுவும் இல்லை என்று அறிக்கை உறுதி செய்தால், செங்கல் சூளை தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சிறுமி கடத்தப்பட்ட கோணத்தில் மட்டுமே விசாரணையைத் தீவிரப்படுத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

மறுபுறம், சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, ஆலம்பூண்டி அரசுப் பள்ளியில் சிறுமியின் தந்தை வடிவேலு மற்றும் தாய் பவானி ஆகியோரிடம் தனித்தனியாகத் தலா 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 37 நாட்களாக நீடிக்கும் இந்த வழக்கில், 4 தனிப்படைகள் சிறுவாடி காப்புக்காடு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று வெளியாக உள்ள தடயவியல் அறிக்கை வழக்கின் அடுத்தகட்ட நகர்விற்கு முக்கிய ஆதாரமாக அமையும் எனக் கருதப்படுகிறது.