பிரபல யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் மீது சென்னை பரங்கிமலை காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, ஆலந்தூரைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகி நந்தகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 14-ஆம் தேதி ‘சாட்டை’ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் தவெக ஆதரவாளர் என்று துரைமுருகன் பேசியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெகவுக்கு ஆதரவாக மீனாட்சி வாக்கு சேகரித்ததாகச் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் பகிரப்பட்ட நிலையில், உண்மைத்தன்மையை அறியாமல் துரைமுருகன் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தவெகவுக்கும் மீனாட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத சூழலில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுவதாக நந்தகுமார் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். இதன் பேரில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுதல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக, சாட்டை துரைமுருகனுக்கு விரைவில் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப் பரங்கிமலை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.