Posted in

அணுசக்தி நிலையங்களுக்குப் பாதுகாப்பு: ‘கோட் 100’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ஈரான்

அமெரிக்காவுடனான போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரான் ராணுவம் ‘கோட் 100’ (Code 100) என்ற அவசரகால ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் முக்கிய அணுசக்தி நிலையங்களைச் சுற்றி வான் பாதுகாப்பு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், எல்லையோரப் பகுதிகளில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வலியுறுத்தி அமெரிக்கா நிபந்தனை விதித்து வருகிறது. இதனிடையே, பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தின் அமெரிக்க ரேடார் நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

 

இந்தப் பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நடன்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய முக்கிய அணுசக்தி மையங்களைப் பாதுகாக்க ஈரான் வான் பாதுகாப்பு வளையத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், எல்லையோரப் பகுதிகளில் எஃப்-14 (F-14) மற்றும் எஃப்-5எஸ் (F-5S) ரக போர் விமானங்களை முழு போர் தயார்நிலையில் ஈரான் நிறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தலைநகர் தெஹ்ரானில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், வான்வழித் தாக்குதல்களைத் தவிர்க்கும் வகையில் ஈரானின் ஏவுகணைத் தளங்களை இரண்டாம் நிலை ஏவுதளங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.