Posted in

பஞ்சாப் ரயில்வே பாதை குண்டுவெடிப்பு வழக்கு: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கியக் குற்றவாளி கைது

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா – சம்பு ரயில்வே பாதையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாகத் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் போர்ஸ் (KZF) அமைப்புடன் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரிந்தர் சிங் என்ற திகிர்வால் (Surinder Singh alias Thikriwal) என்பவரே அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, என்.ஐ.ஏ. அமைப்பின் ஒருங்கிணைப்போடு புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி சரக்கு ரயில் பாதை நிறுவனத்திற்குச் சொந்தமான பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சதிச் செயலில் தொடர்புடைய எட்டாவது நபராகக் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கைக் குலைப்பதற்கும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதற்கும் தீவிரவாத அமைப்புகளால் திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஜக்ரூப் சிங் என்பவன் சம்பவத்தின் போது உயிரிழந்த நிலையில், அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையிலும், உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாகவும் சுரிந்தர் சிங் சமூக வலைதளத்தில் காணொளி வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக அவருக்கு எதிராக என்.ஐ.ஏ. தரப்பில் லுக் அவுட் சுற்றறிக்கை (LOC) பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது பல கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் நிதி உதவிகள் மற்றும் வலைப்பின்னல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கை அமைந்துள்ளதாகப் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தேசப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படும் நபர்களை வெளிநாடுகளிலிருந்து சட்டப்பூர்வமாக மீட்டு வருவதன் மூலம் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும் எனத் பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரிந்தர் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடைய பிற வெளிநாட்டு முகவர்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்தும் தீவிர விசாரணைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.