தமிழக முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி வளாகத்தில் சுமார் 1.16 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நவீன விளையாட்டு அரங்கத்தை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கான மாஸ்டர் பிளான், விரிவான கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு, பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்கத் தகுதி வாய்ந்த நிறுவனத்தைத் தேர்வு செய்ய இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இங்கு பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கபடி, வாலிபால், பாஸ்கட் பால், பாக்ஸிங், வெயிட் லிஃப்டிங் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ளன.
பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழைக்காலங்களிலும் தடையின்றி பயிற்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகளுடன் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் இந்த அரங்கம் பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகள் முதல் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் வரை பங்கேற்கத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது வடசென்னைப் பகுதியில் விளையாட்டுக் கலாச்சாரம் மேம்படுவதுடன், திறமையான வீரர்களை உருவாக்கும் முக்கிய மையமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.