அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் (ஏப்ரல் 7, 2026) முடிவடைய உள்ள நிலையில், “இன்று இரவு ஒரு நாகரிகமே அழியக்கூடும்” என அவர் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. இதற்குப் பதிலடியாகப் பேசியுள்ள ஈரானின் முதல் துணை அதிபர் முகமது ரேசா ஆரிஃப், “எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் எங்களது உளவுத்துறை மற்றும் ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளது; அனைத்துச் சூழல்களையும் (All Scenarios) சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சாம்பலாக்கிவிடுவோம் என்ற டிரம்பின் மிரட்டல் ஒரு “போர்க்குற்றம்” மற்றும் “இனப்படுகொலைக்கானத் தூண்டுதல்” என ஈரான் ஐநா சபையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஈரான் தனது நாட்டு மக்களைத் திரட்டி ஒரு விசித்திரமான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்நாட்டு இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சகம் விடுத்துள்ள அழைப்பின் பேரில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி “மனிதச் சங்கிலி” (Human Chains) அமைத்துப் போராடி வருகின்றனர். “எங்கள் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாக்க உயிரையும் கொடுப்போம்” என்ற முழக்கத்துடன் மக்கள் மின் நிலையங்களைக் காக்க அணிவகுத்து நிற்கின்றனர். சுமார் 1.4 கோடி ஈரான் மக்கள் தங்களது நாட்டைப் பாதுகாக்கத் தாமாக முன்வந்துள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், டிரம்பின் கெடு முடிவதற்கு முன்பே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கியப் போக்குவரத்துப் பாலங்கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்கள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. புனித நகரமான கோம் (Qom) அருகே உள்ள பாலம் மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஒரு ரயில்வே பாலம் தகர்க்கப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) பயன்படுத்தும் தளவாடப் பாதைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். டிரம்பின் “8 மணி கெடு” (8 PM Deadline) நெருங்க நெருங்க, வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த ஆக்ரோஷமான போக்கிற்குப் பதிலடியாக, “சிவப்பு கோட்டைத் தாண்டினால் பதில் தாக்குதல் பிராந்தியத்தைத் தாண்டி இருக்கும்” என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பல ஆண்டுகளுக்கு முடக்கும் திறன் தங்களுக்கு உள்ளதாக ஈரான் மறைமுகமாக மிரட்டியுள்ளது. போப்பாண்டவர் லியோ மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஆகியோர் டிரம்பின் மிரட்டலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும், வெள்ளை மாளிகை தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இன்று இரவு உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை உலகமே அச்சத்துடன் கவனித்து வருகிறது.