Posted in

ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டி: அன்புமணி ராமதாஸ் திட்டம்

தமிழ்நாட்டைத் தொடர்ந்து அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரப் பகுதிகளில் கட்சியை விரிவுபடுத்தித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை ஒட்டியுள்ள ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். ஏற்கெனவே குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது அண்டை மாநிலத்திலும் கட்சியின் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளார்.

கட்சித் தலைவராகத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் பாமக வந்த பிறகு, நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்த இந்த விரிவாக்கப் பணிகளை அன்புமணி செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 28-ஆம் தேதி ஆந்திராவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பாமக வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்து, அடுத்து வரக்கூடிய ஆந்திரப் பிரதேசத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பாமக வட்டாரங்களில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசியல் நகர்வு தொடர்பாகப் பாமக தலைமை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.