Posted in

500 ஹெக்டேர் வரையிலான சுரங்கத் திட்டங்களுக்கு மாநில அளவில் சுற்றுச்சூழல் அனுமதி

இந்தியாவில் 500 ஹெக்டேர் பரப்பளவு வரையிலான நிலக்கரி அல்லாத கனிமச் சுரங்கத் திட்டங்களுக்கு இனி மாநில அளவிலான அமைப்புகளே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் விதிகளைத் திருத்தியுள்ளது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம், 1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 250 ஹெக்டேர் வரையிலான நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு மட்டுமே மாநில அளவில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த உச்சவரம்பு 500 ஹெக்டேராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEAC) திட்டங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் என்றும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) இறுதிச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 500 ஹெக்டேர் வரையிலான நிலக்கரி சுரங்கத் திட்டங்களை மாநில அமைப்புகள் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ள நிலையில், அதே நடைமுறை தற்போது நிலக்கரி அல்லாத பிற கனிமச் சுரங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மாநில அளவிலான ஆணையங்கள் பெற்றுள்ள அனுபவம் மற்றும் ‘பாரிவேஷ்’ (PARIVESH) இணையதளம் வழியிலான வெளிப்படையான நடைமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனுமதி வழங்கும் பணிகளைப் பரவலாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்த விதித் திருத்தம் தொடர்பான வரைவு அறிவிப்பு கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் 60 நாட்களுக்குள் கருத்துகள் கேட்கப்பட்டன. அனைத்து ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது இறுதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதால், 250 முதல் 500 ஹெக்டேர் வரையிலான சுரங்கத் திட்டங்களுக்கான அனுமதி விண்ணப்பங்களை மாநில அளவிலான அமைப்புகள் இனி நேரடியாகப் பரிசீலித்து முடிவெடுக்கும்.