லிபியா கடற்கரைக்கு அப்பால் கடல் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷிய போர்க்கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாகவும், ஹெலிகாப்டர் ஒன்றை அழித்ததாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதி செய்துள்ளார். கிழக்கு லிபியாவின் பெங்காசி (Benghazi) துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷிய கப்பல் குண்டுவெடிப்பு மற்றும் தீயால் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.
2023-ஆம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்ட நவீன ரஷிய போர்க்கப்பலான ‘மெர்குரி’ (Merkury) தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அதனுடன் Ka-27 போர் ஹெலிகாப்டரும் அழிக்கப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதங்களைக் கொண்டு செல்ல ரஷியா பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘எம்வி அங்காரா’ (MV Angara) என்ற ரஷிய சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து தனது ‘எக்ஸ்’ (X) தளப் பதிவில் கருத்து தெரிவித்த ஜெலென்ஸ்கி, நேற்றும் இன்றும் இந்த நடவடிக்கையின் நிலைகள் குறித்து விரிவான விளக்கங்கள் தனக்குக் கிடைத்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். மறுபுறம், இந்தச் சம்பவத்தில் குறைந்தது 10 ரஷிய மற்றும் லிபிய ஊழியர்கள் காயமடைந்ததாகவும், ரஷியா திரும்பும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காகக் கப்பல் நின்றதாகவும் கிழக்கு லிபியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவும், உக்ரைன் ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கிழக்கு லிபியா நிர்வாகம் மாஸ்கோவுடன் இணைந்து இந்தச் சம்பவம் குறித்துக் கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது.