இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் காசா பகுதியின் 99 விழுக்காட்டிற்கும் அதிகமான நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், காற்று, மண் மற்றும் நீர் மாசுபாடு பல தலைமுறைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் நவம்பர் 23 திங்கள்கிழமை வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபாம் (Oxfam) மற்றும் மோதல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் (Conflict and Environment Observatory – CEOBS) இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, சுமார் 78 விழுக்காடு நிலப்பரப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள், தொலைநிலை உணர்தல் மற்றும் அறிவியல் பகுப்பாய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கன உலோகங்கள், வெடிபொருள் எச்சங்கள் மற்றும் இடிபாடுகளில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஆகியவற்றால் மாசு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 85 விழுக்காடு நீர் வசதிகள் சேதமடைந்துள்ள நிலையில், காசா நகரம், கான் யூனிஸ், ரஃபா மற்றும் ஜபாலியா ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான மாசு அபாயம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
ஆக்ஸ்ஃபாம் சர்வதேச நிர்வாக இயக்குநர் அமிதாப் பெஹர் பேசுகையில், காசாவின் சுற்றுச்சூழல் அழிவும் மாசுபாடும் மனித உயிர்கள் பிழைத்திருப்பதற்கான அடிப்படைச் சூழலைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறியுள்ளார். மறுபுறம், இந்த அறிக்கையின் முடிவுகளை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளதுடன், பொதுமக்கள் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதைகள் மற்றும் ஆயுதக் கட்டமைப்புகள் இருந்ததாலேயே இந்த அழிவு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
பரிசோதனைக் கருவிகள் மற்றும் நிபுணர்கள் காசாவுக்குள் நுழைவதில் உள்ள கட்டுப்பாடுகளால் மாசு அளவை முழுமையாக மதிப்பிடுவதில் சிரமம் நீடிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சுத்திகரிப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னுரிமை அளிக்கப்படாவிட்டால், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நீண்ட காலம் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.