Posted in

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய சென்னை தொழிலதிபர்

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சுமார் 208 கோடி ரூபாய் மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர். நவம்பர் 26, 2026 வியாழக்கிழமை அன்று திருமலையில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்த ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்காவின் ஆக்சஸ் ஹெல்த்கேர் (Access Healthcare) நிறுவனத்தின் நிறுவனராகவும், சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் வர்தமான் ஜெயின் உள்ளார்; அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். வழங்கப்பட்டுள்ள 121 கிலோ தங்க ஆபரணங்களில் 106 கிலோ நகைகள் ஏழுமலையானுக்கும், 15 கிலோ நகைகள் பத்மாவதி தாயாருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. ஏழுமலையானை உச்சி முதல் பாதம் வரை அலங்கரிக்கும் வகையில் கிரீடம், சங்கு, பாத அணிகலன்கள் மற்றும் 238.2 காரட் வைரங்கள் அடங்கிய சுமார் 45 முதல் 46 வகையான ஆபரணங்கள் ஒன்பது தொகுப்புகளாகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

திருப்பதி கோயில் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கை இதுவெனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் ஆணையிட்டதாலேயே தாங்கள் இந்தக் காணிக்கையைச் செலுத்தியதாக வர்தமான் ஜெயின் தம்பதி கூறியதாகத் தெரிவித்தார். மேலும், “நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருவது போல, மக்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை ஆன்மீக அல்லது மனிதாபிமான அறப்பணிகளுக்காக, தேவைப்படுபவர்களுக்கு உதவ ஒதுக்க வேண்டும்; இத்தகைய சேவையின் மூலமே உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது” எனச் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

காணிக்கையாக வழங்கப்பட்ட இந்தத் தங்க ஆபரணங்கள் ரங்கநாயகர் மண்டபத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க கோயிலின் கருவறையான ஆனந்த நிலையத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஏழுமலையான் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் அணிவிப்பதற்காக இந்த ஆபரணங்கள் தேவஸ்தான நிர்வாகத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.