Posted in

போர்நிறுத்தத்தை காசாக்கும் ஈரான்: போர்க்கால நஷ்டத்தை ஈடுகட்ட ஈரான் பலே திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அரசுக்கு இடையே எட்டப்பட்ட இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ஈரான் ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, ஜலசந்தி வழியாகச் செல்லும் ஒவ்வொரு வணிகக் கப்பலுக்கும் சுமார் 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதன் மூலம் தனது நாட்டின் உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான நிதியைத் திரட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் இந்த “சுங்கச் சாவடி” (Tehran Toll Booth) முறைக்குச் சர்வதேச கடல்சார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஈரான் முன்வைத்துள்ள 10 அம்ச அமைதித் திட்டத்தில், ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. எகிப்தின் சூயஸ் கால்வாய் முறையைப் பின்பற்றி, இந்தப் பாதையைப் பயன்படுத்தும் நாடுகள் ஈரானுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெஹ்ரான் வாதிடுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாத இறுதியில் சில கப்பல்கள் 2 மில்லியன் டாலர் வரை செலுத்திப் பாதுகாப்பான வழித்தடத்தைப் பெற்றதாக ‘லாயிட்ஸ் லிஸ்ட்’ (Lloyd’s List) போன்ற சர்வதேச நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் இந்தக் கட்டண வசூலை “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டித்துள்ளார். “அவர்கள் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காதான் ஏன் கட்டணம் வசூலிக்கக்கூடாது?” (What about us charging tolls?) என டிரம்ப் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்துத் தொடங்க வேண்டும் என்பதற்காக இந்த விவகாரத்தில் அமெரிக்கா தற்காலிகமாக மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிதியைக் கொண்டு ஈரான் தனது ஏவுகணைத் திட்டங்களை வலுப்படுத்தும் என இஸ்ரேல் கவலை தெரிவித்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், இந்தக் கட்டண வசூல் விவகாரம் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும். சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஹார்முஸ் போன்ற பன்னாட்டு நீர்ச்சந்திகளில் எந்தவொரு நாடும் தன்னிச்சையாகக் கட்டணம் வசூலிக்க முடியாது. ஆனால், ஈரான் தனது பலத்தைக் காட்டி இந்த விதிமுறைகளை மாற்ற முயன்று வருகிறது. இந்த இரண்டு வார கால அவகாசத்திற்குள் இது குறித்து ஒரு தெளிவான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், மீண்டும் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டு போர் மேகங்கள் சூழ வாய்ப்புள்ளது.