சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள டாடோங்கோ (Dadonggou) பகுதியில் 1,400 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தங்கப் படிமம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இயற்கை வள அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. தற்போதைய தங்க விலையான ஒரு டிராய் அவுன்ஸ் 3,550 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் இதன் மொத்த மதிப்பு சுமார் 165 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 15,28,931 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது.
1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனாவில் ஒரே இடத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய தங்கப் படிமம் இதுவாகும். முன்னதாக 2024-ஆம் ஆண்டில் ஹுனான் மாகாணத்தில் உள்ள வாங்குவில் (Wangu) 1,000 டன்னுக்கும் அதிகமான தங்கப் படிமம் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்த இரு இடங்களிலும் சேர்த்து 2,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. பெய்ஜிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வளப் பொறியாளர் டு ஜியா தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட துளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து, ‘சைனா மைனிங்’ (China Mining) இதழில் இது குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படிமத்தில் தங்கத்தின் தரம் ஒரு டன் பாறைக்கு 0.3 முதல் 1 கிராம் வரை குறைவாக இருந்தாலும், அதனை எளிதாகப் பிரித்தெடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தங்கத்தை 65 முதல் 91 சதவீதம் வரை மீட்டெடுக்க முடியும் என்றும், இது எரிமலைச் செயல்பாடுகளால் உருவாகாமல் புவி ஓட்டின் அசைவுகள் மற்றும் டான்-லு பிளவு (Tan-Lu Fault) மாற்றங்களால் உருவானது என்றும் ஆய்வுக் குழுவினர் விளக்கியுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த மதிப்பு பூமிக்கடியில் உள்ள மொத்தத் தங்கத்தின் சந்தை மதிப்பை மட்டுமே குறிக்கிறது என்றும், சுரங்கம் தோண்டுவதற்கான செலவு மற்றும் எவ்வளவு தங்கத்தை வெட்டியெடுக்க முடியும் என்பது இதில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற புவியியல் அமைப்பு கொண்ட பசிபிக் விளிம்பு, அலாஸ்கா மற்றும் ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதிகளிலும் இதுபோன்ற படிமங்கள் இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.