சுமார் 415 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ‘பிரீயார்க்டுரஸ் ஜிகாஸ்’ (Praearcturus gigas) என்ற புதைபடிவ உயிரினம் ஒரு பிரம்மாண்டத் தேள் இனத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 1870-களில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பழமையான புதைபடிவங்களை நவீன சிடி ஸ்கேன் மற்றும் வரைதல் தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்த பின்னர், ‘பாலியோண்டாலஜி’ (Palaeontology) இதழில் வெளியான ஆய்வு இந்த முடிவை முன்வைத்துள்ளது.
பிரிட்டன் பகுதியில் கிடைத்த இந்தப் புதைபடிவங்களின் இடுக்கி மட்டும் சுமார் 6.3 அங்குல நீளமும், முழு உடலும் சுமார் 3.3 அடி (ஒரு மீட்டருக்கும் மேல்) நீளமும் இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஊர்வன, பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் முன்னோடிகள் நிலத்திற்கு வருவதற்கு முன்பே இந்த உயிரினம் வாழ்ந்ததாகவும், அப்போது நிலப்பரப்பில் பெரிய வேட்டையாடும் விலங்குகள் அதிகம் இல்லாததால் இது ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இது நிலத்திலும் நீரிலும் வேட்டையாடும் தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பிரிட்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்லுயிரியலாளருமான ரிச்சி ஹோவர்ட், “நிலத்தில் உயிரினங்கள் உருவாகத் தொடங்கிய காலத்திலேயே பிரீயார்க்டுரஸ் வாழ்ந்துள்ளது; அப்போது ஊர்வன, பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் மூதாதையர்கள் இன்னும் நீரை விட்டு வெளியே வரவில்லை” என்று கூறியுள்ளார். கனடாவில் கண்டறியப்பட்ட ‘எரமோஸ்கார்பியஸ்’ (Eramoscorpius) போன்ற மற்ற பழமையான தேள் மாதிரிகளுடன் ஒப்பிட்டும், கால்கள் மற்றும் உடல் அமைப்புகளை ஆய்வு செய்தும் இந்த வகைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலப்போக்கில் உணவுப் போட்டி அதிகரித்ததன் காரணமாக இந்தப் பிரம்மாண்டத் தேள் இனம் படிப்படியாகக் குறைந்து அழிந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். விலங்குகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் ஆரம்பகாலச் சூழலியல் மாற்றங்கள் குறித்த புரிதலுக்கு இந்தப் புதைபடிவ ஆய்வு புதிய தகவல்களை வழங்கியுள்ளது.