சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின் (Guangxi Zhuang Autonomous Region) முன்னாள் அரசுத் தலைவர் லான் தியான்லிக்கு (Lan Tianli – 64), லஞ்ச ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட மரண தண்டனையைச் சீன நீதிமன்றம் நவம்பர் 27, 2026 வெள்ளிக்கிழமை விதித்துள்ளது. மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்டே இடைக்கால மக்கள் நீதிமன்றம் (Intermediate People’s Court of Changde) வழங்கிய இந்தத் தீர்ப்பில், 587 மில்லியன் யுவானுக்கும் (சுமார் 87.5 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமான மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை அவர் சட்டவிரோதமாகப் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2008 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் குவாங்சியில் வகித்த அரசுப் பதவிகளைப் பயன்படுத்தி, வணிகச் செயல்பாடுகள், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் உதவி செய்ததற்காக லான் தியான்லி பெருமளவில் லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு குற்றங்களை ஒப்புக்கொண்டது, விசாரணை அமைப்புகளுக்குத் தெரியாத தகவல்களைத் தாமாக முன்வந்து வெளிப்படுத்தியது, மனவருத்தம் தெரிவித்தது மற்றும் சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துகளைத் திருப்பித் தந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2025 மே மாதம் முதல் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2025-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அரசுப் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த வழக்கின் பொது விசாரணை கடந்த ஜூலை 30, 2026 அன்று நடைபெற்றதுடன், இறுதி அறிக்கையின்போது லான் தியான்லி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததாகச் சீன அரசு ஊடகமான சின்ஹுவா (Xinhua) செய்தி வெளியிட்டுள்ளது. அவரது ஊழல் தொகை மிக அதிகமாக இருப்பதால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் ஆயுள் முழுவதும் அரசியல் உரிமைகளைப் பறிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த மரண தண்டனைக் காலத்தில் அவர் வேறு எந்தக் குற்றத்திலும் ஈடுபடாவிட்டால், அந்தக் காலம் முடிந்ததும் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பிறகு, தண்டனைக் குறைப்புக்கோ அல்லது பரோலுக்கோ தகுதியில்லை என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.