திருநெல்வேலி: 2026 சட்டமன்றத் தேர்தலின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில், தென் தமிழகத்தின் கோட்டையான நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ (Roadshow) மற்றும் தேர்தல் பிரச்சாரம் மொத்த அரசியலையும் புரட்டிப் போட்டுள்ளது.
திருநெல்வேலியில் மக்கள் கடல்!
இன்று மதியம் நெல்லை வந்திறங்கிய விஜய்யை வரவேற்க, சந்திப்பு ரயில் நிலையம் முதல் பாளையங்கோட்டை வரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தங்களது தலைவனை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிய ரசிகர்களின் கூட்டம் நெல்லை மாநகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.
விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்தபோது, திரண்டிருந்த முதியவர்களும் பெண்களும் “தளபதி.. எங்களை காப்பாத்த வந்துட்டீங்களா” என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. கூட்ட நெரிசலில் சிக்கிய பலரை விஜய் நேரில் பார்த்து கையசைத்து ஆசுவாசப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
மேடையில் விஜய் கர்ஜனை!
தேர்தல் பிரச்சார மேடையில் மைக் பிடித்த விஜய், “இது வெறும் கூட்டமல்ல, இது ஒரு தலைமுறைக்கான புரட்சி!” என்று தனது உரையைத் தொடங்கினார்.
“இத்தனை ஆண்டுகாலம் உங்களை ஏமாற்றியவர்களுக்கு இந்த தேர்தல்தான் இறுதி எச்சரிக்கை. நான் அரசியலுக்கு வந்தது பதவிக்காக அல்ல, உங்கள் ஒவ்வொருவரின் கண்ணீரைத் துடைக்கத்தான். என் வேட்பாளர்கள் சாதாரணமானவர்கள், ஆனால் அவர்களின் லட்சியம் மிகப்பெரியது. ஊழல் என்னும் கரையை தொடமாட்டோம் என்று நாங்கள் ‘உத்தரவாதம்’ அளிக்கிறோம்” என்று அதிரடியாக முழங்கினார். குறிப்பாக, தென் தமிழக இளைஞர்களுக்காகவும், போதைப்பொருள் ஒழிப்பிற்காகவும் அவர் முன்வைத்த வாக்குறுதிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்டாலினுக்கு நேரடி சவால்?
ஆளும் திமுக அரசை மறைமுகமாக சாடிய விஜய், “இனி மக்கள் வரிப்பணத்தில் கல்லா கட்டும் காலம் முடிந்துவிட்டது. வரும் ஏப்ரல் 23-ல் ‘விசில்’ சத்தம் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும்” என்று ஆவேசமாகப் பேசி தனது உரையை முடித்தார். நெல்லையில் கூடிய இந்த பிரம்மாண்ட கூட்டம், 2026 தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.