உக்ரைன் முழுவதும் சனிக்கிழமை (நவம்பர் 28, 2026) நடைபெற்ற ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இரவு முழுவதும் 1,246 உக்ரைன் ட்ரோன்களைச் சுட்டுவீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தின் நிழின் (Nizhyn) நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்து ஏழு பேர் காயமடைந்ததாக அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு சபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் மருத்துவமனை வாகனம் ஒன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்கியதில் செவிலியர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மற்றும் கார்கிவ் (Kharkiv) ஆகிய பகுதிகளிலும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை காலை வெளியிட்ட தகவலில், இரவோடு இரவாக 1,246 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், மாஸ்கோ பகுதியை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) எச்சரித்துள்ளார். குளிர்காலம் நெருங்கும் நிலையில், உக்ரைனின் மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. மறுபுறம், ரஷ்யாவின் ரோஸ்டோவ் (Rostov) மற்றும் சமாரா (Samara) பகுதிகளில் உள்ள எரிபொருள் மற்றும் தொழிற்சாலை இலக்குகளை உக்ரைன் ட்ரோன்கள் குறிவைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இரவில் ஏவப்பட்ட 162 ரஷ்ய ட்ரோன்களில் 141 ட்ரோன்களை அழித்ததாகவோ செயலிழக்கச் செய்ததாகவோ தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.