Posted in

ஊரக மகளிருக்கு இலவச கறவை மாடு, 5 ஆடுகள்: விண்ணப்பிக்க டிசம்பர் 17 கடைசி நாள்

கிராமப்புறப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், 100 சதவீத மானியத்தில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் 5 ஆடுகள் வழங்கும் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்குத் தகுதியானவர்கள் டிசம்பர் 17, 2026 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்புள்ள கறவை மாடு, 2 ஆண்டுகளுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்து, உடனடித் தீவனச் செலவிற்காக ரூ. 3,000 வழங்கப்படும். அதேபோல், ‘வெற்றி மகளிர்’ ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 30,000 மதிப்புள்ள 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் (1 ஆண் கிடா மற்றும் 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள்), 2 ஆண்டுகளுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்து, தீவனச் செலவிற்காக ரூ. 2,500 வழங்கப்படுவதுடன், ஆடுகளைச் சிறப்பாகப் பராமரிப்போருக்கு ஓராண்டுக்குப் பிறகு ரூ. 2,000 ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

18 முதல் 60 வயதிற்குட்பட்ட கிராமப்புறப் பெண்கள் மற்றும் திருநர்கள் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; இதில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே கால்நடை வைத்திருப்போர் மற்றும் முந்தைய ஆண்டுகளில் இத்துறையின் திட்டங்களில் பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. கறவை மாடு திட்டத்திற்கு 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களும், ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்குத் தங்களது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ நிலம் உள்ளவர்களும் தகுதியற்றவர்கள் ஆவர்.

சென்னை நீங்கலாகப் பிற மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் `tnahschemes.tn.gov.in` என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி உதவி பெறலாம் என்றும் கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.