Posted in

ராணுவச் செலவை விட நலத்திட்டங்களுக்கு ஸ்டார்மர் முன்னுரிமை? பிரிட்டனில் வெடிக்கும் புதிய விவாதம்!

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிப்பதை விட சமூக நலத்திட்டங்களுக்கே அதிக நிதியை ஒதுக்குவதாக (Benefits over Bullets) எதிர்க்கட்சிகள் மற்றும் சில பாதுகாப்பு வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் திட்டமிடல்களில், ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு மெதுவாக இருக்கும் வேளையில், முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோருக்கான நலத்திட்ட உதவிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ‘Poll of the Day’ கருத்துக்கணிப்பில், பெரும்பலான மக்கள் ஸ்டார்மர் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாகத் தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

சமூக நீதி மையம் (Centre for Social Justice) வெளியிட்டுள்ள ஒரு பரபரப்பு அறிக்கையில், பிரிட்டனின் நலத்திட்ட உதவிகளுக்கான செலவு இந்த ஆண்டு மட்டும் சுமார் £18 பில்லியன் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு 200 அதிநவீன போர் விமானங்களையோ அல்லது 15 போர்க்கப்பல்களையோ வாங்க முடியும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது பிரிட்டன் தனது ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையை விட, உடல்நலம் மற்றும் ஊனமுற்றோருக்கான சலுகைகளுக்கே அதிகப்படியான நிதியைச் செலவிடுவதால், உலகளவில் பிரிட்டனின் ராணுவத் தாக்கம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சர்வதேச அளவில் ஈரான்-அமெரிக்கா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், ஸ்டார்மர் தனது ராணுவச் செலவினங்களை ஜிடிபியில் (GDP) 2.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தத் தாமதம் செய்வதாகத் டோரி (Tory) கட்சியினர் சாடுகின்றனர். உக்ரைனுக்கு “வெற்று காசோலைகளை” (Blank Cheques) வழங்குவதை நிறுத்திவிட்டு, நாட்டின் சொந்த ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனாக் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே தனது அரசின் முதல் கடமை என ஸ்டார்மர் தரப்பு வாதிடுகிறது.

மறுபுறம், வெளிநாடுகளுக்கான உதவித் தொகையை (Foreign Aid) 31 சதவீதம் வரை குறைத்து, அந்த நிதியை உள்நாட்டு ராணுவப் பயன்பாட்டிற்குத் திருப்பப்போவதாக ஸ்டார்மர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் £6.5 பில்லியன் நிதியை ராணுவ விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. “நலத்திட்டமா அல்லது ராணுவமா?” என்ற இந்த இக்கட்டான சூழலில், ஸ்டார்மர் எடுக்கும் முடிவுகள் வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூர் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.