இஸ்லாமாபாத்தில் இருந்து வாஷிங்டன் திரும்பும் வழியில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது விமானத்தில் இருந்தபடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்து நேற்று (ஏப்ரல் 13, 2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “பேச்சுவார்த்தை முறிவு அல்லது அந்த வெடிப்பு (Explosion) அமெரிக்கத் தரப்பில் இருந்தே வந்தது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறியதைக் கண்டு பொறுமையிழந்த அமெரிக்கா, இந்தத் தீவிரமான முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
குறிப்பாக, பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்பதுதான் முதன்மை நிபந்தனையாக இருந்தது. ஆனால், ஈரான் அதனைச் செய்யத் தவறியதுடன், அணுசக்தி விவகாரத்திலும் பிடிவாதம் காட்டியதால் அமெரிக்கா பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். “ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த உறுதியான நிலப்பாட்டை இஸ்ரேல் முழுமையாக ஆதரிக்கிறது; இரு நாடுகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு; நாங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, நெதன்யாகுவின் இந்தத் தொலைபேசி அழைப்புதான் அமெரிக்காவின் மனநிலையை மாற்றியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் நெதன்யாகுவோ, அமெரிக்காவின் நோக்கம் ஈரானிடம் இருந்து அனைத்து அணுசக்திப் பொருட்களையும் அகற்றுவதும், வரும் தசாப்தங்களில் எவ்வித அணுசக்திச் சோதனைகளையும் அனுமதிக்காமல் இருப்பதே எனத் தெளிவுபடுத்தியுள்ளார். டிரம்பின் இந்த “நாவல் பிளாக்கேட்” (Naval Blockade) எனப்படும் கடல்வழி முற்றுகை, ஈரானை வழிக்குக் கொண்டு வருவதற்கான மிகச்சரியான நடவடிக்கை என அவர் பாராட்டியுள்ளார்.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்தப் பேச்சு எரிநெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்துள்ளது. “ஈரான் விதிகளை மீறியதால் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்” என்று கூறியுள்ள நெதன்யாகு, இஸ்ரேலிய ராணுவம் வடக்கு எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த மிக நெருக்கமான ராணுவ மற்றும் இராஜதந்திர ஒருங்கிணைப்பு, மத்திய கிழக்கில் ஒரு பெரிய போருக்கான அறிகுறியாகவே சர்வதேச அரசியலில் பார்க்கப்படுகிறது.