“எப்பொழுதுமே ஏதோ ஒரு பெரிய கட்சி கொடுக்கும் பணத்துக்காக வாலாட்டும் ஒரு நபராகவே இருந்து வருகிறார் இந்த வேல்முருகன். தமிழக வாழ்வுரிமை கட்சி (TVK) என்ற பெயரில் அவர் கட்சி நடத்தி வருகிறார். இந்தக் கட்சி இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. மேலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. தற்போது விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், கலகத்தை உண்டு பண்ணச் சொல்லி, திமுக சில எலும்புத் துண்டுகளை வீச, அதைக் கவ்விக்கொண்டு தற்போது களமிறங்கியுள்ளார் வேல்முருகன்.”
சென்னை பெரம்பூர் தொகுதியில் ‘TVK’ என்ற சுருக்கப் பெயரைப் பயன்படுத்துவதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் (TVK – வேல்முருகன்), தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (TVK – விஜய்) இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. “நாங்கள் தான் உண்மையான TVK” என்று கூறி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், நடிகர் விஜய்யின் கட்சியினர் இந்த அடையாளத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
முன்னதாக, பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் மற்றும் பெயரைக் சட்டவிரோதமாகப் பயன்படுத்திப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகப் புகார் எழுந்திருந்தது. இது தொடர்பாக பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் வேணுகோபால் வியாசர்பாடி தியாகராய கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்தச் சம்பவம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால், தேர்தல் ஆணையத்தின் சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தங்களது கட்சியின் அடையாளத்தை (TVK) மறைமுகமாகப் பயன்படுத்தி வருவதாகவும், இது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் பெரம்பூர் தொகுதியில் இரண்டு ‘TVK’ அணிகளுக்கும் இடையிலான இந்த சட்டப் போராட்டம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.