துருக்கியின் சான்லியுர்பா (Sanliurfa) மாகாணத்தில் உள்ள சிவெரெக் (Siverek) மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளியில் நேற்று (ஏப்ரல் 14, 2026) காலை பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. அந்தப் பள்ளியில் பயின்ற 18 வயது முன்னாள் மாணவர் ஒருவர், கையில் ‘ஷாட்கன்’ (Shotgun) எனப்படும் வேட்டைத் துப்பாக்கியுடன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினார். முதலில் பள்ளி மைதானத்தில் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கிய அவர், பின்னர் பள்ளி வராண்டாக்கள் மற்றும் வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்களைத் தேடித் தேடிச் சுட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரமான தாக்குதலில் 10 மாணவர்கள், 4 ஆசிரியர்கள், ஒரு பள்ளிக் கேன்டீன் ஊழியர் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி என மொத்தம் 16 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்பறை ஜன்னல்கள் வழியாகக் குதித்துத் தப்பினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அவர்கள் மாகாணத் தலைநகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆளுநர் ஹசன் சில்டாக் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்குள் புகுந்த தாக்குதல்தாரியைப் பிடிப்பதற்காகப் போலீஸ் சிறப்புப் படை பிரிவினர் விரைந்து வந்தனர். பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் அந்த இளைஞரை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, அவர் தப்பிக்க வழியின்றித் தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் தாக்குதலுக்கு முன்னதாகச் சமூக வலைதளங்களில் இது குறித்து மிரட்டல் விடுத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்பதால், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர் மீது இதற்கு முன்பு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.