பாலினக் கடத்தல் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள பிரிட்டிஷ் சமூகவாதி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல், தற்போது டெக்சாஸில் உள்ள பிரையன் ஃபெடரல் சிறை முகாமில் (FPC Bryan) அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் மற்ற கைதிகளைப் போலல்லாமல், மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, சிறைக் கண்காணிப்பாளர் டாக்டர் தனிஷா ஹாலுடன் (Dr. Tanisha Hall) அவருக்கு ‘அசாதாரணமான’ நெருக்கமான உறவு இருப்பதாகவும், இதனால் அவர் சிறை விதிகளை மீறி பல சலுகைகளைப் பெற்று வருவதாகவும் சக கைதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, மேக்ஸ்வெல்லுக்கு அவரது அறையிலேயே உணவு விநியோகம் செய்யப்படுவதாகவும், நள்ளிரவு நேரங்களில் கூட அவருக்குப் பொழுதுபோக்கு வசதிகள் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மற்ற கைதிகள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்போது, மேக்ஸ்வெல் மட்டும் வரம்பற்ற டாய்லெட் பேப்பர்கள், சிறப்புப் பயிற்சிகள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வசதி போன்ற ‘விஐபி’ சலுகைகளைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து சக கைதிகள் “இது சிறைச்சாலை போல இல்லை, ஒரு ஹோட்டல் போல இருக்கிறது” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் (House Judiciary Committee) கவனத்திற்குச் சென்றுள்ளது. மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த அதீத சலுகைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேக்ஸ்வெல்லின் சொகுசு வாழ்க்கை குறித்து வெளியில் பேசிய ஜூலி ஹோவெல் என்ற கைதி, உடனடியாக வேறொரு கடுமையான சிறைக்கு மாற்றப்பட்ட சம்பவம், அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையைக் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சாடியுள்ளனர். சிறைக் கண்காணிப்பாளர் மேக்ஸ்வெல்லுக்குத் தனது தண்டனையைக் குறைக்க விண்ணப்பிப்பதற்கும் (Commutation) ரகசியமாக உதவி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கில் பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், அவரது கூட்டாளியான மேக்ஸ்வெல்லுக்கு சிறையில் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் ரகசியங்கள் இவருக்குத் தெரியும் என்பதால், அவரைத் திருப்திப்படுத்தவே இத்தகைய ‘ராஜ உபசாரங்கள்’ செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. “சிறையில் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்” என்ற குரல் தற்போது வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகச் சிறைத்துறை தலைமை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.