Posted in

இங்கிலாந்தில் வெயில் கொடுமை: புகழ்பெற்ற மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ!

பிரிட்டனின் (UK) பல்வேறு பகுதிகளில் தற்போது வரலாறு காணாத வகையில் கோடைகால வெப்ப அலை (Heatwave) வீசி வருவதால், வெப்ப நிலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக, ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பரோவில் (Edinburgh) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்தர்ஸ் சீட்’ (Arthur’s Seat) என்ற அழிந்துபோன எரிமலை மலைப்பகுதியில் நேற்று மாலை ஒரு பயங்கரமான புல்வெளித் தீ (Grass fire) விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிக வேகமாகப் பரவி வருவதால் ஒட்டுமொத்த எடின்பரோ நகரத்தின் வான்பரப்பு முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோலிரூட் பூங்காவில் உள்ள புகழ்பெற்ற ‘செயின்ட் ஆண்டனி’ திருச்சபை சிதைவுகளுக்கு (St Anthony’s Chapel ruins) அருகிலுள்ள தாவரங்கள் நிறைந்த புல்வெளிப் பகுதியில் மே 25 திங்கள்கிழமை மாலை சுமார் 6.50 மணியளவில் இந்தத் தீ விபத்து முதன்முதலாகத் தொடங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் (SFRS) விபத்து நேரிட்ட மலைப்பகுதியைச் சுற்றிலும் முகாமிட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து போராடியும் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வரை தீ முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடின்பரோவில் நேற்று வழக்கத்திற்கு மாறாக அதிகபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்ததே இந்தக் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவியதற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த கடுமையான வெப்ப அலையின் காரணமாக, கடந்த வார இறுதியில் நடைபெற்ற புகழ்பெற்ற எடின்பரோ மாரத்தான் (Edinburgh Marathon) ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற பல வீர்ர்கள் கடும் வெப்ப சோர்வினால் (Heat exhaustion) பாதிக்கப்பட்டு, சுமார் 16 பேர் அவசர அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தீ விபத்தினால் வான்வெளியில் எழும் கரும்புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால், உள்ளூர் மக்கள் தங்களது ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பத்திரமாக மூடி வைக்குமாறு தீயணைப்புத் துறை எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாகப் போலீசார் அந்த மலைப்பகுதிக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் அதிரடியாக மூடியுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர் . அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளில் நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக, இதுபோன்ற கோடைகாலக் காட்டுத்தீ விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.