Posted in

80 மைல் வேகத்தில் எதிர் திசையில் வந்து கர்ப்பிணியைக் கொன்ற லண்டன் போலீஸ் அதிகாரி!

பிரித்தானிய தலைநகர் லண்டனில், போலீஸ் அதிகாரி ஒருவர் அதிவேகத்தில் தவறான பாதையில் காரைச் செலுத்தி விபத்து ஏற்படுத்தியதில், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது பிறக்காத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மெகாபாலிட்டன் காவல் துறையைச் சேர்ந்த கிறிஸ் ஜான்சன் (56) என்ற அதிகாரி, மணிக்கு 80 மைல் வேகத்தில் (சுமார் 130 கி.மீ) சாலையின் எதிர் திசையில் காரை ஓட்டிச் சென்று இந்த கொடூர விபத்தை ஏற்படுத்தியதாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று தென்கிழக்கு லண்டனின் எல்தாம் (Eltham) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதற்காக அடையாளம் இல்லாத போலீஸ் காரில் (Unmarked Police Car) சென்ற கிறிஸ் ஜான்சன் மற்றும் மற்றொரு அதிகாரி டேனி டாம்கின்ஸ் (35) ஆகியோர், மணிக்கு 30 மைல் வேகம் மட்டுமே செல்ல வேண்டிய குடியிருப்புச் சாலையில் மிக மோசமான வேகத்தில் பந்தயத்தில் ஈடுபடுவது போல் சென்றுள்ளனர். விபத்துக்கு சில நொடிகள் முன்பு வரை சுமார் 130 மீட்டர் தூரத்திற்கு இவர்கள் சாலையின் தவறான பக்கத்திலேயே மற்ற வாகனங்களை முந்திச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு தனது ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வந்துகொண்டிருந்த 38 வயதான மரியம் அகமது (Mariam Ahmed) என்ற கர்ப்பிணிப் பெண், சாலையிலிருந்து திரும்ப முயன்ற போது போலீஸ் கார் அவரது காரின் மீது மிகக் கொடூரமாக மோதியது. இதில் அந்தப் பெண்ணின் பிறக்காத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மரியமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின்படி, விபத்தை ஏற்படுத்திய அதிகாரி தனது காரின் முழு திறனையும் பயன்படுத்தி அதிகபட்ச வேகத்தில் இயக்கியது அம்பலமாகியுள்ளது.

தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள போலீஸ் அதிகாரி கிறிஸ் ஜான்சன் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாகக் (Causing death by dangerous driving) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டன் போலீசாரின் இந்த பொறுப்பற்ற செயலால் ஒரு தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் லண்டன் வாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.